சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

விருத்தப் பா ,என் விருப்புப் பா !நீரடித் துழுத மண்ணில் 
      நிறைவள மேகி மீண்டும் 
வேரடி முளைத்தல் போலும் 
      விளமுடன் தேமா காயும் 
சீரடிச் சிறப்பை மேவிச்  
      செப்பிடும் விருத்தப் பாவில் 
தாரடி கொத்தைப் போன்று 
      தழைத்திடும் எதுகை மோனை!

கண்ணொரு கலையை நோக்கின் 
      கற்பனை நெஞ்சில் ஊறும்!
பண்ணொடு பரிசம் போட்டுப் 
      பைந்தமிழ் மாலை சூடும்!
வண்ணமாய் வரையும் இந்த 
      வழுவிலா விருத்தப் பாக்கள்  
மண்ணுள வரையில் பூக்கும் 
      மல்லிகை வாசம் விஞ்சும்!

நல்லுரை கூறும் வேந்தர் 
      நயமுடன் தந்த கற்கைத் 
தொல்லுரை நெஞ்சில் ஏற்றித் 
      தொடர்கவி பாடும் வல்லார் 
சொல்லுரை சொக்கும் வண்ணம் 
      சுருதியில் குழைத்துப் பாடின் 
கல்லுரை போல மண்ணில் 
      காலமும் கடந்து வாழும் !

அஞ்சனை வயிற்றில் வாழ்ந்த 
      அனுமனின் கருணை பெற்றால் 
வஞ்சனை மறைதல் போல 
      மருவிடா விருத்தப் பாக்கள் 
கஞ்சனை நாணம் கொள்ளும் 
      கன்னியின்  அழகில் காய்ந்த 
நெஞ்சனை மாற்றும் இன்னோர் 
      நிறைகவி கம்பன் ஆக்கும் !

கூவிடும் குயிலோ ! பிள்ளை 
     குழைத்திடும் அமுதோ ! தாசர் 
பாவிடும் அரங்கோ ! வீசும் 
     பைந்தமிழ் சிறப்போ ! முல்லை 
தூவிடும் மணமோ ! ஔவை 
     துலக்கிய மறையோ ! நல்லோர் 
நாவிடும் வாழ்த்தோ ! இந்த 
      நலந்தரு விருத்தப் பாக்கள் !

                  ****************
பிரியமுடன் பாவலர் .வீ.சீராளன் 

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

காதல் சிதைவுகள் !


காற்றுக் கூடக் காதல் தூதில்
கனத்துப் போகக் கண்டேன்  - அதை
ஆற்றுப் படுத்த அலையும் போதில்
அங்கச் சிதைவுகள் கொண்டேன் !

காதல் இல்லா உலகம் என்றே
காட்டக் கூடுமோ சொல்லு  - அதை
வேதம் என்றே விரும்பிக் கொண்டால்
விரையும் உன்மேல் கல்லு !

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

காலமே கவிதை நண்பா !

வானமே எல்லை கொண்ட  
       வாலிபக் காதல் வந்தால்  
மானமே போயும் நெஞ்சில் 
       மறந்திட முடியார் வாழ்வில்  
கானமே தனிமை போக்கும் 
       காய்ந்துயிர் வேகும்  தன்னுள்    
ஊனமே அடைந்தும் எண்ணார்
       உலகிது மாயம் என்றே !

வெள்ளி, 6 மே, 2016

எனையறியாமல் மனம்பறித்தாய் ....!சிந்தையி லூறிய செந்தமி ழே - என்னைச்
சீண்டிடு முன்விழிப் பார்வைக ளே
எந்தப்பி றப்பதன் எச்சங்க ளோ - இன்னும்
என்னுயிர் ஆளுமுன் நாணங்க ளே !

பொன்னைநி கர்த்திடும்  பூவிழி யா - ளவள்
புன்னகை சிந்திடும்  நாளினி லே
என்னுயி ரோசையு மேழிசை யே  -  தரும்
ஏக்கங்க ளைந்தக  மின்புற வே !

கண்ணைக்க வர்ந்திடுங்  காரிகை யா - ளவள்
காட்டிய அன்பிலும் பேரெழி லே
வண்ணக்க னாக்களும் வாய்மொழி யா - குமே
வஞ்சிப்பெ யர்சொல்லித் தூங்கையி லே !

உன்னைநி னைத்திடும் போதினி  லே - நெஞ்சில்
ஊர்மண்ணின் வாசனை வீசிடு தே
தன்னந்த னிமையைப் போக்கிட வே  - நீயும்
தந்தாய்நி னைவுகள் ஆயிர மே !

கொஞ்சுங்கு ழந்தையைப் போலிருந் தே - மனங்
கொள்ளைய டிப்பவள்  கூந்தலி லே
விஞ்சும்ம ணந்தரும் விந்தையு  மே - மலர்
விண்டுவ ழிந்திடுந்  தாதுக  ளே !

மந்தாரச் சோலையின் மாங்குயி லோ - வஞ்சி
மார்கழித் திங்களின் தண்ணொளி  யோ
செந்தூரப் பூவிதழ்த் தேன்துளி யோ  - பாரி
சேவகஞ் செய்தமுல் லைக்கொடி யோ !

ஊடலைப் பூக்குமு தட்டழ கே    - காதல்
ஊறுமி ராகத்தின் மோகன மே
சேடலைப் போலிரு கன்னங்க ளே - அவள்
சீதைப்பி றப்பெனச்  செப்பிடு  மே !

ஆன்மாநி றைந்தவ ளேகிட வே - மின்னும்
ஆகாயத் தாரகை தோன்றலை யே
தேன்மாந றுஞ்சோலை  பூக்கலை யே - வீசும்
தென்றல்த வழ்ந்திடக் காணலை யே !

.....................கும்மிச் சிந்து தொடரும் ...!

பிரியமுடன்  சீராளன்


சனி, 6 பிப்ரவரி, 2016

கவிதை மொழி !


பாடும் கானம் பௌர்ணமி நிலவு 
பைந்தமிழ் போற்றும்  காவியம் - நீ  
ஓடும் நிலவின் ஒளியில் வரைந்த 
ஒப்பிலாத் தாரகை ஓவியம்

கனவோ நினைவோ கம்பன் கவியோ 
காரிகை  உன்விழி  அறியேன் -தினம் 
எனையே இழந்து  இதயம் எரித்தும் 
என்னவள் உன்னைப் பிரியேன் !

புதன், 27 ஜனவரி, 2016

குருவருள் பதிற்றந்தாதி !ஓடித் திரிந்த உணர்வுகளை ஒன்றாக்கிப்
பாடிக் களிக்கப் பகலிரவாய்ப் - பாடங்கள்
நாடிக் கொடுத்திட்ட நற்குருவுக் கோர்புகழைத் 
தேடிக் கொடுப்பேன் தினம்!


1. கற்றுப் பயனடையக் காத்திருக்கும் எல்லோர்க்கும்
    பற்றுடனே பாடம் பயில்விக்கும் - நற்கவிஞர்!
    என்னுள் கவியும் இருப்பதைக் கண்டுணர்ந்து 
    நன்றே'கற் பித்தார் நயந்து!

புதன், 16 டிசம்பர், 2015

உயிரோவியம்!ஆருமறி யாமலுயிர் ஆடும் வலியூட்டும்
சாருமலர்ப்  பூங்குழலி  சாய்ந்துவிடத்  - தீருமிதன்
பாரமொரு நாளில் பறந்திருக்கும் ! பாவையவள்
நேரமொரு நீள்கனவில் நெஞ்சு !

இதழ்முகிழும் ரோசாவோ! இன்றமிழோ! மின்னும்
நுதலழகும் நூற்பாவோ? கன்னம்   - புதுக்கவிதைப்
பூவனமோ? பொய்கைமலர்ப் பூந்தாதோ? என்னவளின் 
ஓவியமும் கொள்ளும் உயிர் !